நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் புதிய பத்து முக்கிய அம்சங்கள்!
இந்தியாவில் வாழும் மக்களின் நுகர்வுத் தன்மையைப் பாதுகாக்கும் பொருட்டு, இந்திய அரசால் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986 ஏற்படுத்தப்பட்டது. இந்த சட்டம் இயற்றப்பட்டு முப்பது ஆண்டுகளில் வர்த்தகத்தின் வளர்ச்சியானது நமது நாட்டில் பல மாற்றங்களைக் கண்டிருக்கிறது. இந்த மாற்றங்களுக்கேற்ப நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் பல சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டிய சூழ்நிலை உருவானது
அதனால் இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்துக்கு மாற்றாக, ‘இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019’ என்னும் புதிய சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் தற்போது நிறைவேற்றப் பட்டுள்ளது. இதிலுள்ள பத்து முக்கிய அம்சங்கள் பற்றிக் காணலாம்.
1. ஒழுங்குமுறை ஆணையம்
செபி, I.R.D.A.I போன்று சில ஒழுங்குமுறை ஆணையங்கள் இருப்பதைப்போல, நுகர்வோர் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கென்று ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் குழுக்கள் இருந்தாலும் நுகர்வோர் பாதுகாப்பை உறுதிசெய்ய அவற்றிற்குப் போதுமான அதிகாரம் இல்லையென்பதால், புதிய ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆணையத்திற்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள்
நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் என்ற இந்த அமைப்புக்கு அனைத்து மண்டலங்களிலும் தனி அலுவலகம் இருக்கும். நுகர்வோர்கள் தருகின்ற புகார்கள் மீது விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்குவதற்கும், பொருள்களின் தரத்திற்கு ஏற்படும் இழப்பீட்டுக்குத் தக்க நுகர்வோருக்கு நஷ்ட ஈடு வழங்குவதற்கும் இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது.
2. தவறான விளம்பரம் மற்றும் முறைகேடான வர்த்தகம்
விளம்பரங்கள் மூலமாக விற்கப்படும் பொருள்கள் தவறானது என்று தெரிய வந்தால், அதற்கு இரண்டு வருட சிறைத்தண்டனையும் Rs.10,00,000/- அபராதத் தொகையும் வசூலிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் அதே தவறைச் செய்பவர்களுக்கு ஐந்து வருட சிறைத் தண்டனையும் Rs.5,00,000/- நஷ்ட ஈடும் வசூலிக்க நுகர்வோருக்கு இந்தச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
3.தவறான விளம்பரங்களுக்கு நடிகர்கள் மற்றும் பிரபலங்கள்மீது நடவடிக்கை
தொலைக்காட்சி மற்றும் செய்தித்தாள்கள் மூலமாக, பொதுமக்கள் வாங்குகின்ற பொருள்களைப் பற்றித் தவறான முறையில் விளம்பரம் செய்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்க இந்தச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
4. புகார் செய்யும் முறையில் தாராளமயம்
இந்த புதிய சட்டத்தின்படி, எந்த மாவட்டத்தில் இருந்தாலும், எந்த மாநிலத்தில் இருந்தாலும், நுகர்வோர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலிருந்து நுகர்வோர் நீதிமன்றங்களை நாட வழி வகுக்கப்பட்டுள்ளது.
5. வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரித்தல்
இந்தபுதிய சட்டத்தின்படி, சாட்சியாளரையோ புகார் தாரரையோ வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக நீதிமன்றங்கள் விசாரிக்க முடியும். இதனால் வழக்குகள் துரிதமாக முடித்து வைக்கப்படும்
6. புகார் ஏன் நிராகரிக்கப்பட்டது?
புகார்தாரரை விசாரிக்காமல், ஒரு நுகர்வோரின் புகாரை, ஆணையத்தால் இனி தள்ளுபடி செய்ய முடியாது. பேச்சு வார்த்தைகளின் மூலம் சுமுகமாகத் தீர்க்கப்படவேண்டிய புகார் எனில், அதற்கும் இந்தச் சட்டத்தில் வழி வகுக்கப்பட்டுள்ளது.
7. புகார்களை விரைவில் தீர்வு செய்தல்
தற்போது அதிகமான வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. அதற்கும் இந்தச் சட்டத்தின் மூலம் விரைவில் தீர்வு காண்பதற்குப் புதிய நடைமுறைகளைக் கொண்டுவர வழி வகுக்கப்பட்டுள்ளது.
8. முறையற்ற வர்த்தக நடைமுறைகள்
பழைய சட்டத்தில் முறையற்ற வர்த்தக நடைமுறைகள் ஏதும் இணைக்கப்படவில்லை. ஆனால், இந்த சட்டத்தில்
⧭ ரசீது கொடுக்காமல் பொருள்கள் வழங்குவது
⧭ வாங்கிய பொருள்களைத் திரும்பப் பெறாமல் இருப்பது,
⧭ சேவைகளை முன்கூட்டியே ரத்து செய்யமுடியாமல் போவது,
⧭ முன்கூட்டியே கடனைச் செலுத்துவதை அனுமதிக்காதது,
⧭ கூடுதலாக டெபாசிட் தொகையைக் கேட்பது,
⧭ அதிகமாக அபராதம் கேட்பது
போன்றவை இணைக்கப்பட்டிருக்கிறது.
9. இழப்பீடுகள் பற்றி
இந்த புதிய சட்டத்தில் உற்பத்தியாளர் அல்லது சேவையை வழங்குபவர்களுக்கு அதிக பொறுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. ஒரு நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் சேவையால் பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் இச்சட்டத்தின் கீழ் நுகர்வோர்கள் இழப்பீடு பெறமுடியும்.
10. கலப்படத்துக்கு உண்டான தண்டனைகள்
எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாத கலப்படமாக இருந்தாலும், அதற்கு ஆறு மாத கால சிறைத்தண்டனையும், ஒரு லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். ஓரளவு சுமாரான பாதிப்பை ஏற்படுத்தும் கலப்படமாக இருந்தால், ஒரு வருடம் சிறைத்தண்டனையும், மூன்று லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதனால், வருங்காலங்களில் கலப்படம் கணிசமாகக் குறையும்.