ஒருவரின் இறப்பு பற்றிய விபரத்தை RTI மூலம் பெற முடியுமா?

இறப்பு குறித்து விவரம் அளிக்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு

பண்ருட்டி, செப். 13: தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் படி இறப்பு குறித்து முழு விவரம் தெரிவிக்க வேண்டும் என பண்ருட்டி நகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பண்ருட்டி தாலுக்கா நுகர்வோர் மனித உரிமை பாதுகாப்பு சங்கத் தலைவர் ஆரோக்கியசாமி, தகவல் பெறும் உரிமை சட்டத்தின் மூலம் பண்ருட்டி ராமசாமி தெருவைச் சேர்ந்த சம்சுதீனின் மகன் இறந்த சலிம் இப்ராகிம் எங்கு, எப்படி இறந்தார், தகவல் கொடுத்தது யார்? என்ன காரணத்தால் இறந்தார் என தகவல் அதிகாரியான பண்ருட்டி நகராட்சி மேலாளருக்கும், ஆணையருக்கும் மனு செய்ததில், இறப்பின் காரணம் தனி நபருக்கு தெரிவிக்கக் கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து ஆரோக்கியசாமி மாநில தகவல் ஆணையத்தில் மேல் முறையீடு செய்ததைத் தொடர்ந்து விசாரணை நடத்திய மாநில தகவல் ஆணையர் தி.சீனுவாசன், தகவல் பெறும் உரிமை சட்டம் 22-ன் படி சம்பந்தப்பட்ட இறப்பு சான்றிதழ் பதிவு சட்டம், செயல்படுத்தும் தன்மையுடையது என்பதால் மனுதாரருக்கு உரிய தகவலை ஆணை கிடைக்கப் பெற்ற ஒரு வாரத்துக்குள் மனுதாரருக்கு கேட்ட தகவல்களை கொடுக்க வேண்டும் என பண்ருட்டி நகராட்சி பொது தகவல் அலுவலருக்கு ஆணையிட்டுள்ளது.
நன்றி : தினமணி நாளிதழ் - 20.09.2012
 
Top