சட்ட போராளிகளிடம் இருக்க வேண்டிய ஒரு முக்கியமான ஆயுதம்....
சென்னை மாநகரில் சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியம் அருகில், தமிழ்நாடு நில அளவை பதிவேடுகள் துறை அல்லது நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரகம் அமைந்து உள்ளது. இந்தத் துறையானது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையால் நிர்வகிக்கப்படுகிறது.
தமிழ்நாடு கிராமங்களின் வரைபடங்கள்
தமிழகத்தில் இருக்கின்ற அனைத்து கிராமங்களுக்குரிய கிராம வரைபடம் இங்கு விலைக்கு கிடைக்கிறது. உங்கள் மாவட்டத்தில் உள்ள கிராமங்களின் வரைபடங்களை உங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலேயே வாங்கலாம்! என்றாலும். அங்கு கிடைக்காத வரைபடங்கள் இங்கு கட்டாயம் கிடைக்கும்.
இந்த கிராம வரைபடங்கள் சுமார் 1970 ஆண்டு முதல் 1990 ஆண்டு வரை ரீசர்வே செய்யப்பட்ட வரைபடங்களாகும். எனவே முழு விபரங்களையும் உள்ளடக்கி இருக்கும்.
இந்த வரைபடத்தின் மூலமாக, நமது தமிழ்நாட்டு கிராமங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான குளம், குட்டை, கால்வாய், ஏரி மற்றும் ஆறு போன்ற நீர் நிலைகள் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை நாம் எளிதாக கண்டறியலாம்.
மேலும், இந்த கிராம வரைபடங்களில் உள்ள அரசுக்கு சொந்தமான நீர் நிலைகள் மற்றும் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்கள் மற்றும் கோவில்களுக்கு சொந்தமான நிலங்களின் விஸ்தீரனத்தையும் தற்போது ( நடப்பு ஆண்டில் ) உள்ள “அ” பதிவேடுகளில் உள்ள விஸ்தீரனத்தையும் ஒப்பிட்டு, எங்கெங்கு என்னென்ன ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளது என்பதை ஆதாரபூர்வமாக கண்டறிய முடியும்.
உங்களால் நேரில் சென்று வாங்க முடிந்தால், தேவைப்பட்ட வரைபடத்தை அரைமணி நேரத்திற்குள் வாங்கிவிட முடியும்.
நேரடியாக சென்று அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனுச்செய்து மட்டுமே வரைபடங்களை வாங்க முடியும்.