கொரோனா வைரஸ்
கொரோனா நோய் என்பது முதலில் தொற்று நோய் என்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள். எந்த ஒரு நோயுமே ஆர் நாட் (R0) ஆர் நாட் எனப்படும் ஓர் அளவுகோலை வைத்துத்தான் அதன் பரவும் தன்மை கணக்கிடப்படுகிறது. அந்த வகையில், கோவிட் - 19 கொரோனா வைரஸின் ஆர்.நாட் அளவு 1.5 முதல் 4 வரை இருக்கிறது என்று ஆய்வுகள் சொல்கிறது. அதாவது R0 மதிப்பென்பது 2.5 என எடுத்துக்கொண்டால், கொரோனா தொற்று கொண்ட ஒரு நபர் 30 நாள்களில் 406 நபர்களுக்கு அந்தத் தொற்றைப் பரப்புவார்.
அந்த R0 மதிப்பென்பது கூடுதல் ஆகும்போது அவர் இன்னும் அதிகமாக நபர்களுக்கு நோயை பரப்புகின்ற தன்மையை பெறுவார்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரியாமல் பரப்புபவர் தானும் அவதிப்பட்டு, மற்றவர்களையும் அவதிக்குள்ளாக்குவார். இதனால்தான் நமது மத்திய, மாநில அரசாங்கங்கள், வீட்டில் இருங்கள்!, விலகி இருங்கள்! என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். தவிர்க்க முடியாத பட்சத்தில் வெளியில் செல்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்கள் இதனை கடைபிடிப்பது இல்லை. ஆகையால் பாதிப்பு இன்னும் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. இதனால், ஊரடங்கு உத்தரவை நீடிக்கும் நிலைக்கு அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியை பொதுமக்களே உருவாக்கி இருக்கிறார்கள்.
தனக்கு நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புகிறவர்
தனக்கு கொரோனா நோய் இருக்கிறது என்பதே தெரிந்தே பரப்புபவர்களும் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு டெல்லியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் ஒருவர் புதுச்சேரிக்கு நேர்முகத் தேர்வுக்காக வந்திருக்கிறார். ஊரடங்கு உத்தரவு காரணமாக அவரால் டெல்லி செல்ல முடியவில்லை. விழுப்புரத்தில் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த முகாமில் தங்கி இருந்திருக்கிறார். அந்த முகாமில் இருந்தவர்களுக்கு பரிசோதணை செய்த போது, அவருக்கு நோய் தொற்று இருக்கிறது என்று ஆய்வில் கண்டுபிடித்து அவர் தங்கியிருந்த முகாமிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கிருந்து எங்கோ சென்றுவிட்டார். ஏழு தனிப்படைகள் அவரை தற்போது தேடிக் கொண்டிருக்கிறது. அவர் எங்கே இருக்கிறார் என்பது இதுவரை தெரியவில்லை.
அவர் தப்பிக்க வாய்ப்பு இருக்கிறது
அவர் இப்போது அந்த நோயை எத்தனை பேருக்கு பரப்பி இருக்கிறாரோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது தெரியாமல் எத்தனை பேர்கள் அவருடன் பழகிக் கொண்டிருக்கிறார்களோ தெரியவில்லை. அவருக்கு நோய் இருக்கிறது என்பது அவருக்கு தெரிந்திருக்கலாம். அதனால், அதன் தாக்கம் அதிகமாகும்போது அவர் மீண்டும் ஆஸ்பத்திரிக்கே திரும்பி வரலாம். அவர் பிழைத்துவிடலாம். ஆனால், அவரால் நோய் தொற்றுக்கு ஆளாகி நோய் இருக்கிறது என்பதே தெரியாதவர்களின் கதி என்னாகும்?.
சமூக விலகலினால் என்ன பயன்?
பொதுமக்கள் கட்டுப்பாடுடன் சமூகவிலகலை கடைபிடித்தால், அதாவது முக கவசம் அணிந்து கொண்டு, மற்ற மனிதருடன் இருக்கும்போது இருவருக்கும் உள்ள இடைவெளியை 3 அடி தூரமாக வைத்துக் கொண்டால், ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு கொரோனா வைரஸ் பரவாது.
ஊரடங்கு உத்தரவு
ஆகவே மக்களே, அரசு உத்தரவின்படி ஊரடங்கு உத்தரவை மதியுங்கள். ஒத்துழைப்பு தாருங்கள். சமூக விலகலை கடை பிடியுங்கள். வீட்டிலேயே இருங்கள். விலகியே இருங்கள். வாழ்வதற்கு முதலில் உயிர் முக்கியமானது. அதற்குப் பிறகுதான் உணவு.