சென்னை நில அளவைத்துறை அலுவலகத்தில் கிராம வரைபடம் வேண்டி
இன்று நம்மிடையே அதிகம் நடந்து கொண்டிருக்கும் குற்றத்தில் முக்கியமானது ஆக்கிரமிப்பு ஆகும். முதலாவது காரணம் நமது கவனக்குறைவு; இரண்டாவது காரணம் ஆவணத்தை சரியாக பராமரிக்காதது ஆகும். கவனக்குறைவு இருக்கும்போது நமது நிலத்தை யாராவது ஆக்கிரமிப்பு செய்து விடுகின்றனர். அதுபற்றி உரிய அதிகாரியிடம் புகார் அளிக்கலாம் என்றால் அதற்குரிய முக்கிய ஆவணமாகிய வரைபடம் நம்மிடம் இருக்காது.
வரைபடம் நம்மிடத்தில் இருந்தாலும்....
அப்படி நாம் ஆவணத்தை பத்திரமாக வைத்து இருந்தாலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் தேவையான பணத்தை கொடுத்து அந்த வரைபடத்தையே மாற்றிவிடுகின்றனர். இது போன்ற குற்றத்தை செய்கின்ற அரசு அலுவலர்கள் மிக தைரியமாக இதனை செய்கிறார்கள். காரணம் என்னவென்றால், கை நிறைய பணம் கிடைக்கிறது; ஒரு வேளை அவர்கள் மாட்டிக் கொண்டாலும், வழக்கு முடிவதற்குள் அவர்கள் ஆயுள் முடிவடைந்துவிடுகிறது. அவர்கள் காலத்தின் உபயத்தால் நிரபராதி ஆக்கப்பட்டு விடுகின்றனர்.
நான் கையாண்ட புகாரில் ......
எங்களது ஊரில் இது போன்ற சம்பவம் நடந்தது. வரைபடத்தை மாற்றிவிட்டார்கள். அருகிலிருந்த இடத்து சொந்தக்காரர் புதிய வரைபடத்தின்படி (நான்குமால்) கல்லும் ஊன்றிக் கொண்டார். இவர்களது இடத்தில் அரை ஏக்கரை காணோம். நிலத்தின் உரிமையாளர்கள் பல முயற்சிகள் எடுத்தனர். ஒன்றும் நடக்கவில்லை. கடைசியாக என்னிடத்தில் வந்தனர். செய்யவேண்டிய வேலைகளைச் செய்தேன். எப்படியோ தவறு நடந்துவிட்டது. நான் பழைய அளவுகளின்படி வரைபடத்தை மாற்றிக் கொடுக்கிறேன் என்று வட்டாட்சியர் கூறினார். அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று நான் கூறினேன். நிலத்து உரிமையாளர்களுக்கு அதில் ஏனோ விருப்பமில்லை. வரைபடம் மீண்டும் பழைய அளவுகளின்படி திருத்தி வழங்கப்பட்டது. எனக்கு கணிசமான ஒரு தொகையை அன்பளிப்பாக வழங்கினார்கள். அவர்கள் வட்டாட்சியருக்கு நன்றி செலுத்தினர். வட்டாட்சியர் எனக்கு நன்றி செலுத்தினார்.
சரி, விஷயத்திற்கு வருவோம்!
நமது நிலத்தை ஆக்கிரமித்தால், நம்மிடம் உள்ள பத்திரத்தின் மூலம், எப்.எம்.பி. எனப்படும் வரைபடம் மூலம் நாம் ஆட்சேபிக்கலாம். அரசு நிலத்தை ஆக்கிரமித்தால் என்ன செய்வது? ஒவ்வொரு கிராமத்திற்கான வரைபடங்களை அரசு ஏற்கனவே தயாரித்து வைத்துள்ளது. இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருக்கின்ற நில அளவைத்துறை அலுவலகத்தில் கட்டணம் செலுத்தி வாங்கலாம். கிராம வரைபடங்கள் இங்கு கிடைக்கும் என்று எழுதியெல்லாம் போடப்பட்டிருக்கும். ஆனால், நீங்கள் போய் கேட்டால் இல்லை என்ற பதில்தான் கிடைக்கும். அல்லது அது வேண்டும், இது வேண்டும், அடுத்த வாரம் வாருங்கள் என்று உங்களை அலைய வைப்பார்கள். எனக்கும் அதே பதில்கள்தான் கிடைத்தது. ஆனால், சென்னையிலுள்ள நில அளவைத்துறை அலுவலகத்தில் நமது தமிழ்நாட்டிலுள்ள அனைத்து கிராம வரைபடங்களும் கிடைக்கிறது. அதனை பெற்று ஆக்கிரமிப்பை அறிந்து கொள்ளலாம்.
அந்த அலுவலத்தைப் பற்றி ......
அந்த அலுவலகத்தின் பெயர் நில அளவை மற்றும் நிலவரி விதிப்பு ஆணையகம் ஆகும். இது சென்னையில் சேப்பாக்கத்தில் இருக்கிறது. பஸ்ஸில் செல்வதாக இருந்தால், சென்னை கடற்கரையில் கண்ணகி சிலை அருகே இறங்கி (மேற்கில்) எதிர்புறம் செல்ல வேண்டும். கடற்கரை கிழக்கில் இருக்கிறது. அதற்கு எதிர்புறம் உள்ள சாலையில் செல்ல வேண்டும். டிரெயின் மூலம் செல்வதாக இருந்தால், கடற்கரை ஸ்டேஷனில் இருந்து வேளச்சேரி செல்கின்ற (பறக்கும்) ரயிலில் ஏறிக்கொண்டு சேப்பாக்கம் ஸ்டேஷனில் இறங்கிக் கொள்ள வேண்டும். அந்த ஸ்டேஷன் அருகில் இந்த அலுவலகம் உள்ளது. மேலும், பசுமை தீர்ப்பாயம், மாநில மகளிர் ஆணையம், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலகங்களும் இந்த வளாகத்தில் அமைந்துள்ளது.
படங்கள் எங்கு கிடைக்கும்?
இந்த அலுவலகத்தின் பின்புறம் உள்ள ஒரு அறையில், காலை 10 மணி முதல் மாலை 4 மணிவரை படங்களை விற்பனை செய்கிறார்கள். ஒரு படத்தின் அகலம் 24 அங்குலம், உயரம் 36 அங்குலம் இருக்கிறது. அங்குள்ள அலுவலரிடம் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.
படத்தை பெற விண்ணப்பிக்க வேண்டுமா?
இதற்கென்று நீங்கள் எந்தவித விண்ணப்பமும் எழுத வேண்டியதில்லை. ஒரு சிறிய பேப்பரில் நீங்கள் வேண்டுகின்ற வரைபட கிராமத்தின் பெயர், அதன் தாலுகா, அதன் மாவட்டம் ஆகியவற்றை சிறு குறிப்பாக எழுதி அந்த அலுவலரிடம் கொடுத்தால் போதும். அதை வைத்துக் கொண்டு அவரிடமுள்ள ஒரு பதிவேட்டில் அந்த கிராமமானது எத்தனை வரை படங்களாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொண்டு ஒரு படத்திற்கு ரூ.85/- வீதம் பெற்றுக் கொண்டு அதற்கு ரசீதும் தருகிறார். பின்பு சில மணி நேரங்கள் கழித்துதான் படத்தை வழங்குகிறார். குறைந்தது இரண்டு படங்களாக வரையப்பட்டுள்ளது.
ஒரு அலுவலர்தான் அங்கு இருக்கிறார். ஆர்டர் பெறுவது, அதற்கான கட்டணம் பெறுவது, ரசீது தருவது மற்றும் அங்கு வேறு இடத்திலுள்ள ஜெராஜ்ஸ் மெஷினில் நகல்கள் எடுத்து வருவது என்று பல வேலைகளை அவர் ஒருவரே பார்ப்பதால் கால தாமதமாகிறது
நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத் திட்டம்
நில உடைமைப் பதிவு மேம்பாட்டுத்திட்டம் (Updating Registry Scheme - UDR) எனப்படுகின்ற நிலங்கள் கணக்கெடுப்புத்திட்டம் 01.06.1979 முதல் 30.04.1987 வரை நடைபெற்றது. அதற்குப் பிறகு உள்ள படங்களை மட்டுமே இவரிடமிருந்து நேரடியாக நாம் உடனே பெற்றுக் கொள்ள முடியும்.
அதற்கு முந்திய படங்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?
அந்த ஆணையத்தின் முகப்பில் உள்ள படிக்கட்டுகளின் வழியாக முதல் தளத்திற்கு சென்று அங்குள்ள மத்திய நில அளவைத் துறையின் பொது தகவல் அலுவலர் அவர்களிடம் தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)ன் கீழ் விண்ணப்பிக்க வேண்டும். இதனை நீங்கள் நேரில் வந்துதான் விண்ணப்பிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. தபால் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அவர்கள் அதற்குரிய பணத்தை கட்டச்சொல்லி 15 நாட்களுக்குப் பிறகு தபால் அனுப்புவார்கள். நாம் அவர்கள் கூறுகின்ற வழிமுறைகளின்படி பணத்தை கட்டி அதன் ஒரிஜினல் ரசீதை அனுப்பினால், நமது முகவரிக்கு அவர்கள் அந்த படங்களை அனுப்பி வைப்பார்கள். நேர்ல் சென்று விண்ணப்பம் அளித்தாலும், 15 நாட்களுக்குப் பிறகே படத்தை வழங்க முடியும் என்று சொல்கிறார்கள்.
தகவல் அறியும் உரிமைச்சட்டம், 2005, பிரிவு 6(1)ன் கீழ் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி
பொது தகவல் அலுவலர்
மத்திய நில அளவைத்துறை அலுவலகம்
சேப்பாக்கம்,
சென்னை - 600 005