தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகத்தின் (EPFO - Employees' Provident Fund Organisation) கீழ் பென்சன் பெறுகின்ற ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், தாங்கள் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை அந்த அமைப்பின் அலுவலகத்தில் ஒவ்வொரு வருடமும் சமர்ப்பிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பென்சன் தொடர்ந்து வழங்கப்படும்.
இதற்கு முன் இருந்த நடைமுறை என்ன?
இதற்கு முன்பு பென்சன்தாரர்கள் ஒவ்வொரு வருடத்திலும் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் லைப் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை லைப் சான்றிதழ் அவ்வாறு சமர்ப்பிக்க தவறியவர்களுக்கு அதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் ஓய்வூதிய தொகை நிறுத்தப்பட்டுவிடும்
பென்சன்தாரர்கள் ஆன்லைனில் லைப் சான்றிதழ் அளிக்கும் வசதி
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பகத்தின் கீழ் பென்சன்தாரர்கள், ஆன்லைன் மூலமாக லைப் சான்றிதழை சமர்ப்பிக்கும் வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை அவர்கள் அந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். சமர்ப்பிக்கப்பட்ட தேதியில் இருந்து அடுத்த ஓராண்டு வரை இந்த சான்றிதழ், செல்லும்.
தற்போது கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய நடைமுறையால் பென்சன்தாரர்கள் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க நவம்பர் மாதத்திற்காக காத்திருக்க வேண்டியதில்லை. தங்களுக்கு வசதியான மாதத்தில் அல்லது நாளில் சான்றிதழை சமர்பிக்கலாம். ஒருமுறை சமர்ப்பிக்கும் சான்றிதழானது அடுத்த 12 மாதங்களுக்கு செல்லுபடியாகும்.
டிஜிட்டல் சான்றிதழ் முறை, கடந்த 2015-16 ம் நிதியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் பென்சன்தாரர்கள் பயோமெட்ரிக் முறையில், அவர்களின் ஆதார் எண் சரிபார்க்கப்பட்ட பிறகு, அதனை பயன்படுத்தி சான்றிதழை சமர்பிக்கலாம் என்ற வசதி ஏற்பட்டது.
ஆன்லைனில் லைப் சான்றிதழ் சமர்ப்பிக்க என்ன செய்ய வேண்டும்?
பென்சன்தாரர்கள் தங்களது லைப் சான்றிதழை வங்கி மேனேஜரின் கையொப்பம் அல்லது கெஜட்டட் அதிகாரியின் கையொப்பம் அடங்கிய சான்றிதழை நேரடியாக சென்று அளிப்பதற்கு பதிலாக, எந்த ஒரு இபிஎப்ஓ எலுவலகத்திலும் அல்லது பென்சன் வழங்கப்படும் வங்கியிலும், UMANG ஆப் மூலமாக இதனை சமர்பிக்கலாம். .மேலும், பொது சேவை மையங்களிலும் இதனை சமர்பிக்கலாம்.
வேறு ஆவணங்களை உடன் எடுத்துச் செல்ல வேண்டுமா?
லைப் சான்றிதழை சமர்பிப்பதற்கு இபிஎப்ஓ அலுவலகத்திற்கு எந்த ஒரு ஆவணத்தையும் பென்சன்தாரர்கள் எடுத்துச் செல்ல வேண்டியதில்லை. அவர்களது ஆதார் எண், பென்சன் பேமன்ட் ஆர்டர் எண், வங்கி விபரம், மொபைல் எண் இருந்தாலே போதும். அவர்களது விபரங்கள் பயோமெட்ரிக் முறையில் சரிபார்க்கப்படும். அதன் மூலம் டிஜிட்டல் லைப் சான்றிதழ் ஏற்றுக் கொள்ளப்படும்.