பான் அட்டை பற்றி அதிகம் இண்ட்ரோ தேவை இல்லை. PAN - Permanent Account Number என்பதை எல்லாம் நாம் வேலைக்கு வரும் போது தான் கேள்விப்பட்டு இருப்போம்.

பான் கார்ட் இல்லை என்றால் 20 சதவிகிதம் வரி பிடித்து விடுவேன், 10 சதவிகிதம் வரி பிடித்துவிடுவேன் என அலுவலகத்தில் நிதி பிரிவில் இருப்பவர்கள் சொன்ன பின் தான் நம்மில் பெரும்பாலானவர்கள் பான் அட்டையை வாங்கி இருப்போம். அதன் பின் வருமான வரி செலுத்தும் போது தான் இந்த பான் அட்டையை அதிகம் பயன்படுத்தி இருப்போம்.

இணைப்பு
இப்போது மத்திய அரசு, இந்த பான் எண்ணை, நம்முடைய ஆதார் எண்ணுடன் இணைத்தே ஆக வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறது. இப்படி ஆதாரை பான் அட்டை உடன் இணைக்க டிசம்பர் 31, 2019 வரை கெடு விதித்து இருந்தார்கள். அந்த கெடுவை நீட்டித்து தற்போது மார்ச் 31, 2020 வரை நேரம் கொடுத்து இருக்கிறார்கள்.

எவ்வளவு இணைப்பு
கடந்த ஜனவரி 27, 2020 நிலவரப் படி சுமார் 30.75 கோடி பான் அட்டைகள் முறையாக ஆதார் எண்ணுடன் இணைத்து இருக்கிறார்களாம். இன்னும் சுமார் 17.58 கோடி பான் அட்டைகள் முறையாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வில்லை எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

என்ன ஆகும்
இப்போது ஒருவேளை நாம் எல்லாம் பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்றால் என்ன ஆகும்..? என்கிற கேள்வி எழுகிறதா. சிம்பிள் நம் பான் அட்டை Inoperative அட்டைகள் பட்டியலில் சேர்க்கப்படும். அதாவது நம் பான் அட்டை செயல் இழந்து விடும். இந்த பான் அட்டை செயல் இழந்தால் என்ன ஆகும்..?

வருமான வரி நடவடிக்கை
வருமான வரித் துறையினரின் நோடிஃபிகேஷனில் "whose PANs become inoperative shall be liable for all the consequences under the I-T Act for not furnishing, intimating or quoting the permanent account number" எனச் சொல்லி இருக்கிறார்கள்.

பொருள்
ஒருவரின் பான் அட்டை செயல் இழந்துவிட்டால், அவர் பான் அட்டையைக் கொடுக்காமல் இருந்த தவறுக்காக, வருமான வரிச் சட்டத்தின் படி எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்கள். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், பான் அட்டை செயல் இழந்த பின், அந்த பான் அட்டையை வைத்து செய்த பரிவர்த்தனைகளைக் கூட பான் அட்டை கொடுக்காமல் செய்ததாகவே வருமான வரித் துறையினர் கணக்கில் எடுத்துக் கொள்வார்கள் என ஆடிட்டர்களும் உறுதி செய்து இருக்கிறார்கள்.

விளக்கம்
வங்கிக் கணக்கு தொடங்க, வங்கியில் 50,000 ரூபாய்க்கு மேல் ஃபிக்ஸாட் டெபாசிட் போட, நிலம் மற்றும் வீடு போன்ற அசையாச் சொத்துக்களை வாங்கும் பொது எல்லாம் பான் அட்டையை கட்டாயம் கொடுக்க வேண்டும். நம் பான் அட்டை செயல் இழந்து விட்டால், அது செல்லாததாகிறது. அதற்கு மேல் நம் பான் அட்டையைக் கொடுத்து இந்த பரிமாற்றங்களைச் செய்ய முடியாது.

இணைக்கவும்
இது போல பான் அட்டையை கொடுத்துச் செய்ய வேண்டிய பல பரிவர்த்தனை செய்ய முடியாது. இதற்கு மேல் வருமான வரித் துறை வேறு, பான் அட்டை கொடுக்காததற்கு நம் மீது நடவடிக்கை எடுக்கும். எனவே மக்களே, தயவு செய்து பான் அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்து விடுங்கள்.
 
Top