டெல்லி: இந்தியா முழுவதும் லாக்டவுன் நிலை தொடர்ந்து வருவதால் வீடுகளுக்கு செல்ல முடியாமல் எய்ம்ஸ் மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானோர் அவதியுறும் சூழல் நிலவுகிறது. இதில் நோயாளிகளும் அடங்குவதால் அவர்களது உடல் நிலை பாதிக்கப்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கின்றனர். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையை வடமாநில மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் மிகப் பெரிய மருத்துவமனையான இங்கு அனைத்து சிறப்பு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. இது ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த நிலையில் இங்கு சிகிச்சைக்கு வந்த பெரும்பாலானோர் ஊர் திரும்ப முடியாமல் பசி பட்டினியுடன் தங்க இடமில்லாமல் இருக்கிறார்கள். எய்ம்ஸ் மருத்துவமனையின் முதலாம் வாயிலில் உள்ள நடைபாதையில் ஏராளமானோர் ஊர் திரும்ப முடியாமல் தங்கியுள்ளனர்.

மன் சிங் இதுகுறித்து உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மன் சிங் கூறுகையில் நான் எனது மனைவி சுமன் தேவிக்கு கணைய புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்க எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வந்தேன். சிகிச்சை முடிந்து வீடு திரும்ப தயாரான போது இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் எங்களால் ஊர் திரும்ப முடியவில்லை. இங்குள்ள ஒரு சுரங்கப் பாதையில் தங்கியுள்ளோம்.

ஷாஜஹான்பூர்
உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறோம். நான் சாப்பிட்டு 3 நாட்கள் ஆகிறது. விவசாயியான நானே உணவு கிடைக்காமல் அவதிப்படுகிறேன் என நினைக்கும்போது வேதனையாக இருக்கிறது. கடந்த நவம்பர் மாதம் முதல் எய்ம்ஸில் எனது மனைவிக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். சிகிச்சை பின்னர் எனது மனைவியை உடனடியாக ஷாஜஹான்பூருக்கு அழைத்து செல்ல முடியாமல் நான் மருத்துவமனையை சுற்றியுள்ள நடைபாதையில் 4 மாதங்களாக தங்கியிருந்தோம்.


சுரங்கப்பாதை
19-ஆம் தேதியுடன் மனைவிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அடுத்த மாதம் வர சொன்னார்கள். இருப்பினும் புதிய மருந்து என் மனைவிக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால் ஊரிலிருந்து திரும்பி இங்கே வர வேண்டும் என்பதால் 4 மாதங்கள் தங்கிவிட்டோம். இன்னும் ஒரு வாரம் தங்கலாம் என தங்கினோம். ஆனால் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துவிட்டார்கள். எங்களால் ஊர் திரும்ப முடியவில்லை. இதனால் சுரங்கபாதையில் தங்கியுள்ளோம்.


உணவு
யாராவது தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவுகளை நானும் வாங்கிக் கொண்டு எனது மனைவிக்கும் கொண்டு போய் கொடுக்கிறேன். 144 தடையுத்தரவால் அந்த உணவை வாங்க கூடுவோரை போலீஸார் விரட்டியடிக்கிறார்கள். மேலும் உணவு கொடுப்போரையும் திருப்பி அனுப்பிவிடுகிறார்கள். நேற்று உணவு வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்தேன். அப்போது எனது டர்ன் வரும்போது உணவு தீர்ந்துவிட்டது. இதையடுத்து ஏமாற்றத்துடன் திரும்பினேன். இன்று மீண்டும் அதிகாலை உணவு கொடுப்பதாக கூறினார். 4 பூரி கிடைத்தது. அதில் இரு பூரியை மனைவிக்கு கொடுத்துவிட்டு நான் இரு பூரிகளை உட்கொண்டேன்.

ரூ 9000
ஒருவிவசாயிக்கு இரு பூரிகள் என்பது எத்தனை போதுமானதாக இருக்கும் என நீங்களே சொல்லுங்கள். தற்போது ஆம்புலன்ஸ் மட்டுமே இயக்க அனுமதி என்பதால் அதையும் சிலர் தவறாக பயன் படுத்துகிறார்கள். என்னையும் என் மனைவியையும் ஆம்புலன்ஸில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூருக்கு கொண்டு போய் விட ரூ. 9000 கேட்கிறார்கள். இந்தளவுக்கு பணமிருந்தால் நான் ஏன் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வர போகிறேன். என் மனைவியை ரே பரேலியில் உள்ள மருத்துவமனையில் காண்பிக்க மாட்டேனா?


உணவு
என் மனைவியின் உடம்பிற்கு என்ன என கண்டுபிடிப்பதிலேயே சேமிப்பு மொத்தமும் செலவழிந்து விட்டது. இதே போல் உணவில்லாமல் இன்னும் 10 நாட்களுக்கு எப்படி இருக்கிறது? இதே நிலை நீடித்தால் எய்ம்ஸ் வாயிலில் ஆயிரக்கணக்கான மக்கள் இறக்க நேரிடும். இறந்தாலும் வீட்டிற்கு சென்று இறக்கலாம். பட்டினியாக பிளாட்பார்மில் ஏன் இறக்க வேண்டும் என கேட்டார். இவரை போல் ஏராளமானோர் நோய்வாய்பட்ட உறவினர்களுடன் உணவுக்காகவும் இருக்க இடமில்லாமலும் காத்திருக்கும் சூழல் உள்ளது.
 
Top